மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து அக்கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது பல வழக்குகள் உள்ளன. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதையடுத்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல இ-காமர்ஸ் தளமான மீஷோ, கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற முத்திரை குத்தப்பட்ட டி-ஷர்ட்களை விற்பனை செய்ததற்காக எதிர்வினைகளுக்கு ஆளாகியிருக்கிறது. இ-காமர்ஸ் தளமான மீஷோ, லாரன்ஸ் பிஷ்னோய் முகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை விற்றதாக, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அலிஷன் ஜாஃப்ரி பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர், தனது எக்ஸ் பதிவில், ”லாரன்ஸ் பிஷ்னோய் உருவம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்கள் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே வர்த்தகத்தை எளிதாக்கும் ஆன்லைன் சந்தையான மீஷோவில் விற்கப்படுகின்றன. வெள்ளை நிற டி-ஷர்ட்கள் லாரன்ஸ் பிஷ்னோயின் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளன. அதில் சிலவற்றில் ’கேங்க்ஸ்டர்’ என்ற வார்த்தையும் உள்ளது. மீஷோ மற்றும் Flipkart போன்ற பிற தளங்களில் ரூ.168 க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குற்றங்களை ஊக்குவிக்கும், நியாயப்படுத்தும் வகையில் டி-ஷர்ட்டுகள் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தாலும், இன்னும் சில பிராண்டட் பொருட்கள் குழந்தைகளை இலக்காகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மீஷோ மற்றும் டீஷாப்பர் போன்ற தளங்களில் மக்கள் உண்மையில் கேங்க்ஸ்டர் பொருட்களை விற்கிறார்கள். இந்தியாவின் சமீபத்திய ஆன்லைன் வணிகத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. காவல்துறையும் என்ஐஏவும் இளைஞர்கள் கும்பல் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கப் போராடும் நேரத்தில், சமூக ஊடகச் செல்வாக்கு செலுத்துபவர்கள் கும்பல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் குண்டர்களை மகிமைப்படுத்துவதன் மூலமும் விரைவாக பணம் சம்பாதிக்கிறார்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இவருடைய பதிவு, இணையத்தில் வைரலானதுடன், அது பெருமளவில் எதிர் விமர்சனங்களையும் பெற்றது. இதையடுத்து, மீஷோ அந்தப் பதிவை தன்னுடைய இணையதள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. இப்போது நீக்கியுள்ளது. மேலும், அந்த தயாரிப்புகள் சில்லறை விற்பனைக்கு கிடைக்காது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மீஷோவின் செய்தித் தொடர்பாளர், “அந்த டி-ஷர்ட்களை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஷாப்பிங் தளத்தை வழங்க மீஷோ உறுதியுடன் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த வகையான டி-ஷர்ட்கள் பிற இ-காமர்ஸ் தளங்களில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.