இந்தியா

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில், நிறுவனங்கள் பதில் மனு!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில், நிறுவனங்கள் பதில் மனு!

webteam

தற்பொழுது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், சட்ட திருத்தம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு காலாவதி ஆகிவிட்டது, எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது, எனவே உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், எதிர்மனுதாரர்களான ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்டர் 9-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தற்போது அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு முதலாவதாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு காலாவதி ஆகிவிட்டது. அதனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தற்போதைய புதிய சட்டமான, "தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் 2022 " என்பதன்
முன்னுரை என்பது, சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட அல்லது செல்லாது என அறிவிக்கப்பட்ட முந்தைய 2021-ம் ஆண்டின் சட்ட திருத்தத்தின் பின்னணியில் வெளியிடப்பட்டது என்பது தெளிவாக பிரதிபலிக்கிறது.

"எந்தெந்த விவசயங்கள் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் வரம்பிற்குள் வரும்", என்பது தொடர்பான ஒரு பொருத்தமான சட்டத்தை உருவாக்குவதற்கு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் அனுமதியளித்திருந்தது. ஆனால் அதை கணக்கில் கொள்ளாமல், தற்போதைய இயற்றப்பட்டுள்ள புதிய சட்டமும் திறமையை அடிப்படையாக கொண்டு மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டான ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் முந்தைய சட்டத்தின் படியே எந்த மாற்றமும் இன்றி இயற்றப்பட்டுள்ளது

தமிழக அரசு இயற்றிய "தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் 2022" என்பது முந்தைய 2021-ம் ஆண்டு திருத்தச்சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட அதே நோக்கத்தை அடைய முயல்கிறது என ஆன்லைன் நிறுவனங்கள் சார்பாக பதில் மனுவில் தெரிவித்துள்ளது.