பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றுமா என நூறு ரூபாயில் தொடங்கி லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி ஃபேர்பிளே என அழைக்கப்படும் வலைதளத்தில் சூதாட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மூன்று இடங்களை பாஜக வெல்லுமா எனவும் குறிப்பிட்ட அந்த வலைதளத்தில் பந்தயம் கட்டப்படுகிறது.
சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதை எள்ளளவும் மறைக்காமலும் எந்தவித கவலையும் இல்லாமலும், ஃபேர்பிளே சூதாட்டகளம் வெளிப்படையாக தேர்தல் சூதாட்டத்தை நடத்தி வருகிறது.
வேறு பல வலைத்தளங்கள் மற்றும் செயலிகளும் இதே போன்ற சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தினசரி கோடிக்கணக்கான ரூபாய் பந்தயம் வைத்து ஆன்லைன் சூதாட்டம் மக்களவை தேர்தல் முடிவை மையக்கருவாக கொண்டு நடத்தப்படுகிறது என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் ஃபேர்பிளே, ஜெயில்புக், பக்கார்டி 777, ஓம் 247 மற்றும் சாட்ஸ்போர்ட் போன்ற பல்வேறு தளங்கள் இத்தகைய சூதாட்டத்துக்கு களங்களாக திகழ்கின்றன.
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை நடத்துபவர்களே இத்தகைய தேர்தல் சூதாட்டத்தையும் நடத்துவதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.
முன்பு "சட்டா பஜார்" என அழைக்கப்படும் சட்டவிரோத சூதாட்ட களங்களில் மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தேர்தல் சூதாட்டம் நடைபெற்று வந்தது எனவும் தற்போது அது ஆன்லைன் வடிவில் நடைபெறுகிறது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். டெல்லி போலீஸ் சிறப்பு காவல் பிரிவு இத்தகைய சூதாட்டங்களை நடத்துபவர்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் ஆகியோரை பிடிக்க தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் திடீர் சோதனைகளை நடத்தி "சட்டா பஜார்" சூதாட்ட மையங்களை மடக்கியது போல, ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சுலபமாக இல்லை என்பது காவல்துறையினரின் கருத்து.
பணப்பரிவர்த்தனை முழுக்க முழுக்க ஆன்லைன் மற்றும் UPI மூலமே நடைபெறுகிறது என காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பின்னரே கடவுச்சொல்லை உருவாக்கிய இந்த இணையதளத்துக்குள் சூதாட்டத்தில் ஈடுபட முடியும் என்கிற வகையில் வலைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் அனைத்து இடங்களையும் I.N.D.I.A. கூட்டணி வெல்லுமா, தமிழ்நாட்டிலே திமுக-காங்கிரஸ் கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்... என்பது போன்ற பல்வேறு கேள்விகளின் அடிப்படையிலேயே சூதாட்டம் நடத்தும் இந்த வலைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிட்காயின் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வகையிலே இந்த வலைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாகவும் தற்போது தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. பிட்காயின் முதலீடுகள் இந்தியாவில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன்னத் புக் தளத்தில் சூதாட்டம் நடத்த அதன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலி மூலம் நடைபெறும் சூதாட்டத்தை கண்டறிந்து நிரூபணம் செய்வது மேலும் கடினம் என்பது காவல்துறையினரின் கருத்தாக உள்ளது. அதே சமயத்தில் சாட்ஸ்போர்ட் போன்ற வலைத்தளங்கள் நீதிமன்ற உத்தரவுகள் மூலம் முடக்கப்பட்டுள்ளன எனவும் சவால்கள் கடுமையாக இருந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி காவல்துறை சிறப்பு படை மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் பிரிவுகளும் இதுபோன்ற சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன