மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்படும் 1,054 மெட்ரிக் டன் வெங்காயத்தை கோவாவில் உள்ள 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கவுள்ளதாக கோவா அரசு அதிகாரி சித்திவிநாயக் தெரிவித்துள்ளார்.
வெங்காய விலை உயர்வை ஒட்டி, மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட கோவா அரசு, நாசிக் தேசிய வேளாண் கூட்டுறவை சந்தையிலிருந்து 1,045 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஆர்டர் செய்துள்ளது. மேலும் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இது குறைந்த விலையில் வழங்கப்படும் என்று மாநில சிவில் துறை இயக்குநர் சித்திவிநாயக் நாயக் கூறியுள்ளார்.
அதன்படி, கோவாவில் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 3 கிலோ வெங்காயம் ரூ.32க்கு கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்டர் செய்த வெங்காயம் அங்கு வந்துசேர்ந்தவுடன், விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.