ஒரே நாடு ஒரே தேர்தல்  புதிய தலைமுறை
இந்தியா

“ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே” - உயர்மட்டக்குழு அறிக்கை!

ஒரே நாடு, ஒரே தேர்தலை செயல்படுத்துவது சாத்தியமே என குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.

நிரஞ்சன் குமார்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை ஆய்வு செய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது.

அறிக்கை தாக்கல்

191 நாட்கள் தொடர் ஆய்வுகளையும் பல்வேறு தரப்பிடமும் ஆலோசனை நடத்திய இக்குழு 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் நேற்று தாக்கல் செய்தது.

அறிக்கை தாக்கல் செய்த உயர்மட்டக்குழு

அதில், “ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்துவது சாத்தியம்தான். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம். அதனைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த திருத்தங்களை செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை.

இப்படி தேர்தல் நடக்கும்போது தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றால் ஆட்சி இழப்பு நேர்ந்தால் ஆட்சி காலாவதி காலத்திற்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த தேர்தல் அடுத்த 5 ஆண்டுகள் என்றில்லாமல் அடுத்த ஒரே நாடு தேர்தல் காலம் வரும் வரை மட்டுமே இருக்கும்.

தேர்தல் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேர்தல் ஆணையர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தல் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.