கோவிட் 19 தடுப்பூசியின் ஒரு டோஸ் 82 % கொரோனா உயிரிழப்புகளையும், இரண்டு டோஸ் 95 % கொரோனா உயிரிழப்புகளையும் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்திருக்கிறது
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (ஐசிஎம்ஆர்-என்ஐஇ) மேற்கொண்ட புதிய ஆய்வின்படி இந்த விபரங்கள் தெரியவந்திருக்கிறது. 'இந்தியாவின் தமிழ்நாட்டில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே இறப்புகளைத் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி செயல்திறன்' என்ற ஆய்வு ஜூன் 21 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வில் தமிழ்நாடு காவல்துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆவணப்படுத்தியிருக்கிறது. இதன்படி ஒன்று, இரண்டு டோஸ் மற்றும் தடுப்பூசி போடாத காவல்துறையினரிடையே கொரோனா காரணமாக ஏற்பட்ட இறப்புகளை மதிப்பிடுவதற்கு இந்த தரவு பயன்படுத்தப்பட்டது என்று ஐ.சி.எம்.ஆர்-என்ஐஇ இயக்குனர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர் தெரிவித்தார்.
தமிழகத்தில் காவல்துறையில் 117,524 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பிப்ரவரி 1 முதல் மே 14 வரை 32,792 போலீசார் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றனர். 67,673 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றனர். 17,059 பேர் எந்த தடுப்பூசியையும் பெறவில்லை. இந்த காவல்துறையினரிடையே ஏப்ரல் 13, 2021 முதல் 2021 மே 14 வரை 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இறந்த 31 பேரில், நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். ஏழு பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் மற்றும் மீதமுள்ள 20 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். இதன் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளதாக தெரிகிறது.