ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவரது மகன் தனக்கு வழிவிடாத கார் டிரைவரை அடித்த காட்சிகள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பன்ஸ்வாரா தொகுதி பாஜக எம்.எல்.ஏ தன் சிங் ராவட். அவரது மகன் ராஜா. இவர் பன்ஸ்வாரா தொகுதியில் உள்ள வித்யுத் காலனி பகுதியில் ஜூன் ஒன்றாம் தேதி காரில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்திற்கு காரில் சென்ற ஒருவர் வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜா, தனக்கு வழிவிடாத காரை மறித்து நிறுத்தினார். தன்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அவர், பின்னால் இருந்த அந்த காரின் கதவை திறந்து டிரைவரை பளார், பளார் என சரமாரியாக அடித்துள்ளார்.
காரில் இருந்தவரை வெளியே இழுத்து தள்ளி எம்.எல்.ஏ மகன் ராஜா மற்றும் அவர் உடன் வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். நடுரோட்டிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பின்னர் எல்லோரும் தங்கள் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். ஆனால், இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ மகன் நடுரோட்டில் அராஜக செயல்களில் ஈடுபட்ட போதும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.