இந்தியா

18+ தடுப்பூசிக்கு அரசு மையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி

18+ தடுப்பூசிக்கு அரசு மையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி

நிவேதா ஜெகராஜா

18 முதல் 44 வயது வரையிலான பயனாளிகளுக்கு அரசு மையங்களிலேயே நேரடியாக பதிவு செய்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் இரண்டாவது கட்டம் 45 வயதிற்கு மேற்பட்டோருக்குக் கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கியபோது, இணையதளம் வாயிலான முன்பதிவின் அடிப்படையிலேயே பயனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி மையங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட தேசிய கோவிட்-19 தடுப்பூசி உத்தி அமலுக்கு வந்த பிறகு 18 முதல் 44 வயது வரையிலான பயனாளிகளுக்கு மே 1 முதல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த பிரிவினருக்கு இணையதளம் வாயிலான முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் 18 - 44 வயது வரையிலான பயனாளிகளுக்கு தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்வது, கோவின் டிஜிட்டல் தளத்தில் இந்த வயது பிரிவினர் குழுவாக முன்பதிவு செய்வது என்ற முடிவை கீழ்க்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது:

1. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்ட முகாம்களின் இறுதியில் முன்பதிவு செய்த பயனாளிகள் ஏதேனும் காரணத்தால் தடுப்பூசி மையங்களுக்கு வராத பட்சத்தில், அவர்களுக்கு போடவேண்டிய தடுப்பூசி வீணாவதைத் தடுப்பதற்காக அத்தகைய தருணத்தில் ஒருசில பயனாளிகள் நேரடியாக மையங்களில் பதிவு செய்துக்கொண்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

2. கோவின் தளத்தில் ஒரே செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி ஆரோக்கிய சேது, உமங் போன்ற செயலிகள் வாயிலாக 4 பயனாளிகள் வரை பொது சேவை மையங்களில் முன்பதிவு செய்யும் வசதி இடம் பெற்றிருந்த போதும், கூட்டு பதிவு வசதி கோருபவர்களும், செல்பேசி மற்றும் இணையதள வசதியுடன் கூடிய செல்பேசிகள் இல்லாத மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு வழி வகை செய்யப்படும்.

எனவே, 18 - 44 வயது வரையிலான பயனாளிகள் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்றும், கோவின் தளத்தின் வாயிலாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

எனினும் இந்த வசதி அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் மட்டுமே தற்போது வழங்கப்படும்.

தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தற்போது இந்த வசதி அளிக்கப்படாது. தனியார் மையங்கள், தடுப்பூசி அட்டவணையை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச அரசின் முடிவின் அடிப்படையிலேயே இந்த வசதி வழங்கப்படும். 18 - 44 வயது வரையிலான தகுதி பெற்ற பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவதை மேம்படுத்தும் வகையிலும், தடுப்பூசி வீணாவதைக் குறைக்கும் முயற்சியாகவும், உள்ளூர் நிலவரத்தின் அடிப்படையில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தொடர்பாக மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் முடிவைப் பின்பற்றி செயல்படுமாறு மாவட்ட தடுப்பூசி அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வயதிலான பயனாளிகளுக்குத் தடுப்பூசியை செலுத்துகையில் மையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.