துங்கா மோப்ப நாய் எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

Prakash J

கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டத்தில் சாலையோரத்தில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாகப் போலீஸ் தகவல் சென்றுள்ளது. அதன்பேரில் மோப்ப நாய் உதவியுடன் அந்த இடத்துக்கு போலீஸ் படை விரைந்து சென்றது. துங்கா-2 என்ற போலீஸ் மோப்ப நாய் இதுகுறித்து துப்பு துலங்க களமிறங்கியது. அந்த இடத்திலிருந்து 8 கி.மீ. தூரம் ஓடிய துங்கா, ஒரு வீட்டு வாசலில் போய் நின்றது. அப்போது காவல் துறையினர் அந்த வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஒருவர், பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் ஓடிச் சென்று காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், அது அவரது மனைவி என தெரிய வந்தது. அத்துடன் துங்கா மோப்ப நாய், அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதுடன், முன்னர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலுக்கும் விடை தேடிக் கொடுத்தது. அதாவது விஷயம் என்னவென்றால், ரங்கசாமியின் மனைவி ரூபா. இவர் ஓர் அழகுக்கலை நிபுணர். இவருக்கும் சந்தோஷ் குமாருக்கும் என்ற இளைஞருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக ரங்கசாமி சந்தேகப்பட்டுள்ளார். அதன்பேரில்தான் சந்தோஷ் குமாரை ரங்கசாமி கொலை செய்ததுடன், சாலையில் வீசிச் சென்றுள்ளார். பின்னர், தன் மனைவியையும் கொலை செய்யும் நோக்கில் ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் துங்கா 2 மோப்ப நாயால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஒருவேளை துங்கா 2, அந்த வீட்டுக்குச் சென்றிருக்காவிட்டால், நிச்சயம், ரங்கசாமி, ரூபாவைக் கொன்றிருப்பார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: தலையில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த பவுலர்.. கொட்டிய ரத்தம்.. திகைத்து நின்ற வீரர்கள்! #Video

ரங்கசாமி தாக்கியதில், பலத்த காயமடைந்த ரூபாவுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட அவர் நினைவிழந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரங்கசாமி, சந்தோஷ் குமாரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல முறை எச்சரித்தும், தனது மனைவி, சந்தோஷ் குமாருடன் பேசுவதை நிறுத்தவில்லை என்ற ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாக ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கமாக ஒரு சில நூறு மீட்டர்கள் ஓடிச் சென்று திரும்பி வரும் மோப்ப நாய்களைபபோல அல்லாமல், துங்கா-2 மோப்ப நாய் உண்மையான நபரைக் கண்டுபிடித்து கொடுத்ததற்காக எல்லோரும் அதைப் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக காவல்துறை மோப்ப நாய் படையில் ஏற்கனவே துங்கா என்ற மோப்ப நாய் இருந்ததாகவும், அது கிட்டத்தட்ட 70 கொலை வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியிருந்ததாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு இறந்துவிட்டதால், அதன் நினைவாகத்தான் இந்த நாய்க்கு துங்கா-2 என பெயரிடப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர்