இந்தியா

கூகுள் பெருமைபடுத்திய பாரத் ரத்னா விஷ்வேஸ்வரய்யா யார்?

rajakannan

பாரத ரத்னா விஷ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள், பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. விஷ்வேஸ்வரய்யாவின் 158வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் அவரது படத்தை வைத்து பெருமைபடுத்தியுள்ளது. உலகில் மிகச் சிறந்த பொறியாளராக விஷ்வேஸ்வரய்யா அறியப்படுகிறார். இந்தியாவின் பொறியியல் துறையில் முக்கிய பங்களிப்பை செலுத்தியவர். 

கர்நாடக மாநிலம், சிக்பள்ளாரா மாவட்டம், சிக்கபள்ளாபுரா தாலுகாவில் உள்ள முத்தேனஹள்ளி கிராமத்தில் 1860 செப்டம்பர் 15ம் தேதி விஷ்வேஸ்வரய்யா பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிக்கபள்ளாபுராவில் முடித்த பின், பெங்களூர் சென்ட்ரல் கல்லூரியில் மேல்படிப்பும், தொடர்ந்து பொறியியல் பட்டப்படிப்பும் முடித்தார். 

மும்பை மாகாண ஆட்சியில் துணை பொறியாளராகவும், ஐதராபாத் மாகாண ஆட்சியில் முதன்மை பொறியாளராவும், மைசூர் மாகாண ஆட்சியில் தலைமை பொறியாளர் மற்றும் ரயில்வே துறை செயலாளராகவும் சிறப்பாக சேவை செய்தார். இவரின் உண்மையான சேவையை கவுரவிக்கும் வகையில் அப்போதைய மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார், மைசூர் மாகாணத்தின் திவானாக நியமனம் செய்தார்.

விஷ்வேஸ்வரய்யாவின் தொழில்நுட்ப அறிவைக் கண்டு வியந்த மைசூர் மன்னர் இவரது தலைமையில் மைசூர் மாகாண கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டு குழுவை ஏற்படுத்தினார். இக்குழுவின் மூலம் பத்ராவதி இரும்பு தொழிற்சாலை உள்பட பல தொழில் நிறுவனங்களை உருவாக்கினார். இந்திய நீர்பாசன திட்ட கமிஷனில் இணைந்து பணியாற்றினார். 

பொறியியல் துறையில் அளப்பரிய சாதனைகள் செய்த விஷ்வேஸ்வரய்யாவுக்கு 1955 இல் பாரத் ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. பிரிட்டிஷ் நைட்ஹூட் கிங் விருது, சர் பட்டம் உள்ளிட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரர் இவர். விஷ்வேஸ்வரய்யா பொறியியல் துறையில் செய்த சாதனைகளை விளக்கும் வகையில் பெங்களூரு நகரின் மையப்பகுதியில் விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களில் சுமார் 4 கோடி பார்வையாளர்கள் இந்த மியூசியத்திற்குள் வந்து சென்றுள்ளனர்.