இந்தியா

சேரில் அமர்ந்தபடியே 33 வயது ஜிம் பயிற்சியாளர் மரணம்.. மாரடைப்பால் பறிபோன உயிர்!

சேரில் அமர்ந்தபடியே 33 வயது ஜிம் பயிற்சியாளர் மரணம்.. மாரடைப்பால் பறிபோன உயிர்!

சங்கீதா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 33 வயதே ஆன உடற்பயிற்சியாளர் ஒருவர், நாற்காலியில் அமர்ந்தநிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ஷாலிமர் கார்டனில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார் 33 வயதான அடில். அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் அடில். மேலும், உடற்பயிற்சி கூடத்தின் நேரம் முடிந்தவுடன், அங்கேயே அமர்ந்து தனது ரியல் எஸ்டேட் சம்பந்தமான பணிகளையும் மேற்கொண்டு வருவதை அடில் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடற்பயிற்சி கூடத்தின் நேரம் முடிந்தநிலையில், ரியல் எஸ்டேட் சம்பந்தான வேலைகளை நாற்காலியில் அமர்ந்து அடில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக இருந்ததுடன் அதிகளவில் வியர்த்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அவரது வியர்வை துடைத்துள்ளனர். பின்னர், நாற்காலியில் சாய்ந்த நிலையில் அமர்ந்த அவர், சிறிது நேரத்தில் மூச்சு பேச்சின்றி காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அவரைக் கொண்டு சென்றனர். ஆனால், அடில் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்ததாக அடில் கூறியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஓய்வெடுக்கக் கூறியும், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை நிறுத்தவில்லை அடில். இந்நிலையில் தான் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அடில் உயிரிழந்துள்ளார். அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

அடிலின் திடீர் உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது. கொரோனாவிற்குப் பிறகு கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடற்பயிற்சி விரும்பியான அடில், 33 வயதில் உயிரிழந்தது அவரது நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.