பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்ற நாள் முதல், அதாவது கடந்த 41 மாதங்களில் 775 முறை பொது இடங்களில் உரையாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோடியின் தனிப்பட்ட இணையதளம், அரசின் செய்தி தகவல் மையம் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. மோடி பதவியேற்ற மே 26, 2014 முதல் ஒரு மாதத்திற்கு 19 கூட்டங்களில் பேசியுள்ளதாகவும், இதில் 3 நாட்களுக்கு 2 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளதாகவும், அவற்றுள் பெரும்பாலான கூட்டங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளார் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், உரையாற்றும் திறமை பிரதமர் மோடிக்கு கடவுள் கொடுத்த பரிசு என்றும், எந்த ஒரு செய்தியையும் உள்ளத்திலிருந்து எடுத்துச் சொல்லி மக்கள் மனதில் பதிய வைக்கிற ஆற்றல் மோடிக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 1,401 கூட்டங்களில் உரையாற்றியுள்ளதாகவும், அவர் சராசரியாக மாதத்திற்கு 11 உரைகள் ஆற்றியதாகவும், மன்மோகன் சிங் முதல் 5 ஆண்டுகள் அல்லது இரண்டாவது 5 ஆண்டுகளில் பேசிய கூட்டங்களோடு ஒப்பிடும்போது, மோடி இந்த 41 மாதங்களிலேயே அதிக கூட்டங்களில் உரையாற்றிவிட்டதாகவும் எகனாமிக்ஸ் டைம்ஸ். தெரிவித்துள்ளது.