மக்களவை சபாநாயகராக ஓம்பிர்லா pt web
இந்தியா

மீண்டும் சபாநாயகராக ஓம் பிர்லா.. 2வது இன்னிங்ஸில் இருக்கும் சவால்கள்.. கடந்த கால செயல்பாடுகள் என்ன?

மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஓம் பிர்லா... கடந்த முறை இவரது செயல்பாடுகள் குறித்தும், தற்போது அவர் முன்னே உள்ள சவால்கள் குறித்தும் பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் கணபதி சுப்ரமணியம்

சபாநாயகர் ஓம் பிர்லா

ராஜஸ்தானில் உள்ள கோட்டா மக்களவைத் தொகுதியில் 3 ஆவது முறையாக வெற்றியை ருசித்து, இரண்டாவது முறையாக மக்களவையின் சபாநாயகராகியுள்ளார் ஓம் பிர்லா... கடந்த முறை போட்டியின்றி தேர்வான ஓம்பிர்லா இந்த முறை INDIA கூட்டணி வேட்பாளரை எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவிக்காலத்தை தொடங்கும் ஓம் பிர்லாவை வாழ்த்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் கோரிக்கை, பாரபட்சம் கூடாது என்பது தான்...

கடந்த முறை, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச போதிய வாய்ப்பளிக்காதது, பல மசோதாக்களை நிதி மசோதாக்களாக தாக்கல் செய்ய அனுமதித்தது, பல மசோதாக்களை அவசரகதியில் நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது உள்பட எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமந்துகொண்டுதான் தொடங்குகிறது, அவரது இரண்டாவது இன்னிங்ஸ்...

எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு

கடந்த முறை, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார், அரசுக்கு சாதகமான நடவடிக்கைகளை பின்பற்றினார் என்று குறிப்பிட்டு, ஓம் பிர்லாவின் பாரபட்சமான செயல்பாட்டை பட்டியலிடுகின்றனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்... குறிப்பாக, ஒரே கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர்... சபாநாயகராக ஓம் பிர்லா முதல் முறை பதவி வகித்த காலத்தில், 150 உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்... ராகுல்காந்தியை அவசரகதியில் தகுதிநீக்கம் செய்தது, அரசு இல்லத்தை காலி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மறக்கவில்லை.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், புதிய குற்றவியல் சட்டங்கள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் ஒப்புதல் பெற ஓம் பிர்லா அனுமதித்தார் என்பது காங்கிரஸ் உறுப்பினர்களின் குற்றச்சாட்டு...

பல மசோதாக்களை நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்தார் என்றும் கூறுகிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்... பழைய நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பாடுகளை புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசிக்கவில்லை என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு... சபாநாயகர் அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதே பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடு... அதே நேரத்தில், மகளிர் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஓம் பிர்லா வலியுறுத்தியது பாராட்டப்படுகிறது...

சபாநாயகராக தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய முதல் நாளிலேயே 'நெருக்கடி நிலை' நாட்டில் அமல்படுத்தப்பட்டது குறித்த தீர்மானத்தை ஓம் பிர்லா தாக்கல் செய்ததும், அதுபற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்ததும், அவருடைய செயல்பாடுகளில் அதிக மாற்றம் இருக்காது என்பதை காட்டுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர்..

வலுவாக எதிர்க்கட்சிகள்

கடந்த முறை மக்களவையில் பாஜகவுக்கு மட்டுமே 300 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருந்த நிலையில், தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே 293 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்... எண்ணிக்கை ரீதியாக எதிர்க்கட்சிகளின் நிலை மேம்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 100 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், ராகுல்காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் எம்.பி.க்களின் பார்வை... இந்த மாற்றங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக ஒலித்து, ஓம் பிர்லா முன்பு போல செயல்படாமல் தடுக்கும் என நம்புகிறார்கள் எதிர்க்கட்சி எம்பிக்கள்...