இந்தியா

திகார் சிறையில் என்ன செய்கிறார் மல்யுத்த வீரர் சுஷில் குமார்?

திகார் சிறையில் என்ன செய்கிறார் மல்யுத்த வீரர் சுஷில் குமார்?

webteam

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது திகார் சிறையில் கைதியாக உள்ள சுஷில் குமார், சக கைதிகளுக்கு மல்யுத்தம் கற்றுத்தரும் பயிற்சியாளராக மாறியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் இந்தியாவின் சுஷில் குமார். கடந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு காரணமாக, இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை சத்ரசல் மைதானத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சிறையில் உள்ள கைதிகளுக்கு உடற்தகுதி பயிற்சி மற்றும் மல்யுத்த பயிற்சி அளித்திட சிறை அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.

இதன்மூலம், மல்யுத்த விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் 6-7 கைதிகளுக்கு ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் பயிற்சி அளித்து வருகிறார். முன்னாள் ஜேஎன்யு மாணவர் உமர் காலித் உட்பட மற்ற கைதிகள் சுஷில் குமாரிடம் பயிற்சி பெறுகிறார்கள். தற்போது, அதிகாரிகள் மேற்பார்வையில் கைதிகள் அடிப்படை பயிற்சி பெறுகின்றனர். இந்த தகவலை சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.