இந்தியா

OLX மூலம் ரூ.100கோடி மோசடி செய்த ராஜஸ்தானியர்கள்: தீரன் பட பாணியில் தேடிப்பிடித்த போலீசார்

OLX மூலம் ரூ.100கோடி மோசடி செய்த ராஜஸ்தானியர்கள்: தீரன் பட பாணியில் தேடிப்பிடித்த போலீசார்

webteam

OLX மூலமாக ரூ.100 கோடி வரை மோசடி செய்த இருவரை ராஜஸ்தானுக்குச் சென்று பொறி வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

OLX மூலமாக மோசடி நடைபெறுவதாக சென்னையில் மட்டுமே நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்தன. பணப்பரிவர்த்தனை செயலி மூலம் பலரிடமும் பண மோசடி நடந்து வந்துள்ளது. இது குறித்து தொடர்புகார்கள் வந்ததை அடுத்து தனிப்படை அமைத்தது சென்னை போலீஸ். எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செல்கிறது என்பதை தீவிரமாக தேடிய சைபர் கிரைம் போலீசார் கொள்ளையர்கள் ராஜஸ்தானில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை.

ஒருவார காலம் அங்கு தங்கி இருந்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இருவரை கைது செய்தனர். ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு வேறு சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இருவரின் கைதுக்கு ஒரு கிராமமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஏன் எதிர்க்கிறார்கள் என்பது முதலில் காவல்துறையினருக்கு புரியவில்லை. பின்னர்தான், கொள்ளையடித்த பணத்தை துநாவல் என்ற கிராமமே பங்கிட்டு சொகுசாக வாழ்ந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அக்கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர். ராணுவ அதிகாரி எனக்கூறி OLX மூலமாக மோசடி செய்த இந்த கும்பல் இந்தியாவில் லட்சக்கணக்கானவர்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.