இந்தியா

அஸ்ஸாம் வெள்ளத்தில் எடுக்கப்பட்டது என பரவும் புகைப்படம் - உண்மை என்ன?

webteam

அஸ்ஸாம் கடுமையான வெள்ளப் பாதிப்பைச் சந்தித்திருக்கும் இந்த வேளையில், 2014 ஆம் ஆண்டு வங்கதேச வெள்ளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அஸ்ஸாம் வெள்ளத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டு சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது குறித்த உண்மைத் தன்மையை இந்தச் செய்தியில் பார்க்கலாம். 

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்த பல மிருகங்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இது வரை 100 விலங்குகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அஸ்ஸாம் வெள்ளத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டு சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் வங்கதேசச் சிறுவன் ஒருவன் ஒரு மானை வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் வகையில், ஆற்று நீரில் மூழ்கி, மானை தனது தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு கரை சேர்க்கிறான். இந்தப் புகைப்படத்தை கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயலர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற இந்தப் புகைப்படம் தற்போது தற்போது 31,000 லைக்குகளையும், 8000 ரீடுவிட்களையும் பெற்றது.

இந்தப் புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா “ கதாநாயகர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகளால் உருவாக்கப்படுகின்றனர்” என்று கூறி அவரை பாராட்டியிருந்தார்.

ஆனால் இந்தப் புகைப்படம் அஸ்ஸாம் வெள்ளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. 

இது குறித்து ஆங்கில நாளிதளான டெய்லி மெய்ல்லில் குறிப்பிட்டச் செய்தியில் “இந்தப் புகைப்படமானது கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வங்க தேசத்தில் உள்ள நோகாலி எனுமிடத்தில் நடந்தது. இந்தப் புகைப்படத்தை வங்கதேச புகைப்படக்காரர் ஹசிபுல் வஹாப் என்பவர் எடுத்தார்.” என்று குறிப்பிட்டுள்ளது.