கொண்டாட்டங்களுக்கும், விசித்திரமான சம்பவங்களுக்கு குறைவே இல்லாத நாடாகத்தான் இந்தியா இருக்கிறது. அதுவும் திருவிழா, திருமண போன்ற நிகழ்வுகளில் நடப்பவையெல்லாம் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இப்படி இருக்கையில் நவராத்திரி பண்டிகை முடிவுற்றிருக்கும் நிலையில் கர்பா, தாண்டியா போன்ற நடனங்கள் ஆடப்பட்டு இசைக்கச்சேரிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. அதில் நடந்த சம்பவம் குறித்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி, குஜராத்தின் சூரத் நகரில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ரங்கோலி கோலமிட்டு கர்பா நடனமாடி பாடி மகிழ்ந்து வந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டதால் கொண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் அந்த மக்கள் சற்று திகைத்து போயிருந்திருக்கிறார்.
பின்னர் ஓலா எஸ்.1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்பீக்கர் ஆன் செய்து அதன் மூலம் பாடலை ஒலிக்க விட்டு தங்களது கர்பா நடனத்தை தொடர்ந்திருக்கிறார்கள். இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் செல்ஃபோன் டார்ச்சை ஒளிர விட்டபடியும், ஓலா ஸ்கூட்டரில் பாட்டை போடவிட்டும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிகழ்வு குறித்த வீடியோ ஸ்ரேயாஸ் சர்தேசி என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “மின் தடையால் தடைபட இருந்த நவராத்திரி கொண்டாட்டத்தை ஓலா எஸ்.1 ப்ரோ ஸ்கூட்டர் காப்பாற்றிவிட்டது.” எனக்குறிப்பிட்டு ஓலா நிறுவனத்தையும், அதன் சி.இ.ஓ பாவிஷ் அகர்வாலையும் டேக் செய்திருக்கிறார். இந்த வீடியோ கிட்டத்தட்ட 44 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டும் உள்ளது.
இந்த நிலையில் வீடியோ வைரலான நிலையில் ஓலா சி.இ.ஓ பாவிஷ் அகர்வாலும் ரீட்வீட் செய்து ”அடுத்த ஆண்டுக்குள் புதிதாக நவராத்திரி அம்சத்தையும் இணைத்துவிடுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.