இந்தியா

இணைய வசதி இல்லாமலேயே UPI மூலம் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்!

இணைய வசதி இல்லாமலேயே UPI மூலம் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்!

webteam

இணைய வசதி இல்லாமல் குறைந்த அளவிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏதுவாக “UPI லைட்” என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகமாகும் செய்யவுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.

தற்போது இணைய வசதியை பயன்படுத்தி UPI பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறோம். இணைய வசதி இல்லாத சமயங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் சிரமப்பட்டிருப்போம். இந்த சிக்கலை சரிசெய்ய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இணைய வசதி இல்லாத சூழலில் ஆஃப்லைனிலேயெ பணப் பரிவர்த்த்னைகளை மேற்கொள்ளும் வசதியை UPI Lite மூலமாக வழங்க NPCI திட்டமிட்டுள்ளது.

UPI Lite ஆனது, UPI பயனர்களுக்கான சாதனத்தில் புதிய Wallet ஆக அறிமுகமாக உள்ளது. இது ஆஃப்லைன் முறையில் சிறிய மதிப்புள்ள பணப்பரிவர்த்தனைகளை இயக்க உதவும். இது Paytm மற்றும் MobiKwik உள்ளிட்ட மொபைல் வாலட்டுகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆஃப்லைன் முறையில் சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. யுபிஐ லைட் என்பது ரிசர்வ் வங்கியின் மாதிரியுடன் இணைந்து NPCI வழங்கும் புது சேவையாக இருக்கும்.

இந்த முறையில் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து UPI Lite க்கு பணத்தை ஒதுக்க முடியும். வழக்கமான முறைகளின்படி, இந்த பணத்தை வைத்து ஆஃப்லைனில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். UPI லைட் கட்டண பரிவர்த்தனையின் உச்ச வரம்பு ரூ. 200, இருப்பினும் சாதனத்தில் உள்ள வாலட்டின் மொத்த இருப்பு வரம்பு ரூ. 2000 வரை இருக்கலாம் என NPCI தெரிவித்துள்ளது. UPI Lite இல் கிடைக்கும் பணத்திற்கு வட்டி கிடையாது. UPI லைட் எப்போது அமலுக்கு வரும் என இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் பயனர்கள் தேவையை கருத்தில்கொண்டு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என NPCI தெரிவித்துள்ளது.