புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக 86 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். இந்தத் தொகையே புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட அதிக தொகை எனவும் கூறப்படுகிறது.
ஒடிசாவின் சாம்பல்பூர் பகுதியில் செப்டம்பர் 3ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். சாலை விதிகளுக்கு புறம்பாக பல்வேறு விதிகளை மீறியதாக லாரி ஓட்டுநரிடம் ரூ.86 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லை, அதிக எடை ஏற்றுதல், பொதுவான விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல விதி மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 மணி நேரம் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய லாரி ஓட்டுநர் ரூ.70 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினார். ரூ.70ஆயிரத்துக்கு போலீசார் கொடுத்த ரசீது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.