ருக்சானா பானோ எக்ஸ் தளம்
இந்தியா

ஒடிசா|பிரபல பாடகி 27 வயதில் திடீர் மரணம்.. எதிராளிகள் விஷம் கொடுத்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

Prakash J

ஒடிசாவைச் சேர்ந்த பிரபல பாடகி ருக்சானா பானோ. 27 வயதான இவர், மெஹ்கேகா தில் கா அங்கன், பர்தேஸ் மே ஹை சஜான் மற்றும் தேரி அன்கோ மே ஹை ஜாது உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடியுள்ளார், இது ஒடிசாவின் இசைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் பாக்டீரியா தொற்றுநோய் காரணமாக, புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்தச் சூழலில், அவர் திடீரென்று மரணமடைந்தார். ஆனால் அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

இந்த நிலையில் பாடகி ருக்சானா பானோ விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாயும், சகோதரியும் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த அவரது போட்டி பாடகர் ஒருவரால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த பாடகர் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. பாடகி ருக்சானாவுக்கு ஏற்கெனவே மிரட்டல்கள் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அமெரிக்கா | தடுப்பூசி போட்ட இளம்பெண்.. 10 நிமிடத்தில் பார்வை இழப்பு, வாய் அசைவின்மை.. நடந்தது என்ன?

இதுகுறித்து அவரது சகோதரி ரூபி பானோ, “கடந்த மாதம் ருக்சானா, போலங்கிர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது குளிர்பானம் குடித்தார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 27ஆம் தேதி அவர் பவானிபட்னா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு அவரை மேல்சிகிச்சைக்காக போலங்கிர் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன்பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதே கருத்தை அவரது தாயாரும் தெரிவித்துள்ளார்.

பாடகி ருக்சானா பானோவின் திடீர் மரணம் ஒடிசா ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதி