இந்தியா

ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற்றது ஒடிசா

ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற்றது ஒடிசா

webteam

இனிப்பு பிரியர்களின் பிரதான தேர்வான ரசகுல்லாவுக்கு, ஒடிசா மாநிலம் புவிசார் குறியீடு உரிமை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் தயாராகும் உணவுப் பொருள்கள், உடைகள் உள்ளிட்டவற்றுக்கு காப்புரிமை பெற்றுக் கொள்வது புவிசார் குறியீடு ஆகும். இந்த உரிமையை, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களும், மாநிலங்களும் பெருமையாகக் கருதுகின்றன. இந்த வரிசையில், ரசகுல்லாவுக்கு, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களிடையே உரிமைப் போட்டி நடந்து வந்தது.

பூரி ஜெகன்நாத் சுவாமிக்கு பிரசாதமாக ரசகுல்லா படைக்கப்பட்டதாக ஒடிசாவும், திரிந்து போன பால் என்பது கெட்டுப் போன பால் என்பதால் அதிலிருந்து தயாரிக்கப்படும் ரசகுல்லா இறைவனுக்கு படையல் ஆகாது என்று மேற்கு வங்கமும் வாதிட்டு வந்தன. 

கடந்த 2017 ஆம் ஆண்டு வங்காள ரசகுல்லா என்று மேற்கு வங்க மாநிலம் புவிசார் குறியீடு பெற்றது. இந்நிலையில், ஒடிசா ரசகுல்லா என்ற பெயரில் இந்த இனிப்பு வகைக்கு, ஒடிசா மாநிலம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த‌ச் சான்றிதழை சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டு பதிவாளர் அலுவலகம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.