ஒடிசாவில் ஃபோனி புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல ஐபிஎஸ் அதிகாரி பினாக் மிஸ்ரா அவர்களிடம் கை கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் தற்போது ஒடிசாவை நோக்கி மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை மதியம் 3 மணியளவில் ஒடிசாவிலுள்ள புனித நகரமான பூரி அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பகுதி மாவட்ட எஸ்.பி பினாக் மிஸ்ரா அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனே வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அவர் வீடு வீடாகச் சென்று மக்களிடம் இருகரம் கூப்பி வேண்டியுள்ளார். இது தொடர்பான படங்களை ஒடிசா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அத்துடன், “ஆபத்தான பகுதிகளில் இருப்பவர்களை பத்திரமாக வேறு பகுதிக்கு மாற்றுவதே எங்களின் முக்கிய கடமை” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் விடுப்புகள் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிர்ச் சேதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஒடிசாவில் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.