ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள சரஸ்பாசி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வசித்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து, அந்த மூதாட்டி மகன்களைப் பிரிந்து தனியாக வசித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இதில் அவருடைய மூத்த மகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிலையில், அவரது இளையமகன் சத்ருக்னா மஹந்தா என்பவர், தன்னுடைய தோட்டத்தில் காலிஃபிளவர் பயிர் செய்துள்ளார். இதற்கிடையே அந்த மூதாட்டிக்குப் பணத் தேவை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், தன் மகன் பயிர் செய்திருக்கும் காலிஃபிளவர்களைப் பறித்துச் சென்று விற்றால், காசு கிடைக்கும் என்ற எண்ணத்தில், அந்த மூதாட்டி, சத்ருக்னாவின் தோட்டத்திற்குச் சென்று காலிஃபிளவர்களைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அவரது மகன், தன் தாய் என்றும் பாராமல் அவரை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரை இழுத்துச் சென்று அருகில் இருந்த மின் கம்பத்தில் வைத்தும் அடித்துள்ளார். இதையறிந்த அவரது மூத்த மருமகள் போய் கேட்டுள்ளார். அவரையும் சத்ருக்னா தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவரம் கேள்விப்பட்டு, ஊர் மக்கள் வந்து விசாரித்துள்ளனர். அப்போதும் அவர் தாயை விடுவதாக இல்லை. இதையடுத்து, போலீஸுக்கு தகவல் போய் உள்ளது. அவர்கள் வந்த அந்த மூதாட்டியைக் காப்பாற்றி உள்ளனர். மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மூதாட்டி அளித்த புகாரின்பேரில் இளைய மகன் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.