இந்தியா

1500 ரூபாய் கடனுக்காக 2 கி.மீ தூரம் பைக்கில் கட்டி இழுக்கப்பட்ட இளைஞர் - அதிர்ச்சி வீடியோ!

1500 ரூபாய் கடனுக்காக 2 கி.மீ தூரம் பைக்கில் கட்டி இழுக்கப்பட்ட இளைஞர் - அதிர்ச்சி வீடியோ!

JananiGovindhan

கடன் வாங்கி திரும்பி தராவிட்டால் கொடுத்த கடனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என துடித்து எதேனும் குற்றச் சம்பவத்தில் சிக்குவோரே அதிகமாக இருப்பார்கள். சில சமயங்களில் கொடுத்த கடனை கேட்டவருக்கோ அல்லது வாங்கியவருக்கோ கத்திக்குத்து கூட நடந்திருக்கும். இப்படியான பல சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருவதும் வாடிக்கை.

அந்த வகையில், ஒடிசாவின் கட்டக் பகுதியில் கடனாக கொடுத்த 1500 ரூபாயை திருப்பி கொடுக்காத ஒரே காரணத்துக்காக கடன் வாங்கிய நபரை கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைக்கோடு கயிற்றில் கட்டியபடி இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்திருப்பதாக கட்டக் நகர துணை காவல் ஆணையர் பினக் மிஷ்ரா தெரிவித்துள்ளார். ஜகன்நாத் பெஹெரா என்ற நபரை 12 நீளமுள்ள ஒரு கயிற்றால் கட்டி அதன் மறுமுனையை இரு சக்கர வாகனத்தில் கட்டி கட்டக்கில் உள்ள ஸ்டூவர்ட்பட்னா சதுக்கம் முதல் சுதாஹத் சதுக்கம் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேலாக உள்ள இந்த தொலைவை 20 நிமிடங்களாக இழுத்துச் சென்ற சம்பவம் கடந்த ஞாயிறன்று நடைபெற்று இருக்கிறது.

இதனைக் கண்ட சுதாஹத் சதுக்கத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் 22 வயதான ஜகன்நாத் பெஹெராவை மீட்டிருக்கிறார்கள். இதனையடுத்து விசாரித்த போது ஜகன்நாத் தன்னுடைய தாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக கடந்த மாதம் குற்றம் இழைத்தவரிடம் இருந்து 30 நாளில் தந்துவிடுவதாகச் சொல்லி 1500 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் சொன்னபடி வாங்கிய கடனை கொடுக்காததால் அதற்கு தண்டனையாக இப்படி செய்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகவே கட்டக் போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

பெஹெராவும் போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்ததை அடுத்து சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்து பெஹெராவை இழுத்துச் செல்ல பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் பணியில் இருந்த டிராஃபிக் போலீசாரிடமும் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் கேள்விகள் கட்டக் காவல்துறை தரப்பில் இருந்து பறந்திருக்கின்றன.