ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோயில் pt
இந்தியா

46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை.. ஏராளமான நகைகள், ஆபரணங்களை மதிப்பிட அரசு முடிவு!

PT WEB

ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறக்கப்படும் என அம்மாநில அமைச்சர் ஹரிசந்தன் தெரிவித்துள்ளார்.

பொக்கிஷ அறை திறக்கப்படும்..

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் உள்ள பொக்கிஷ அறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த பொக்கிஷ அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் இது அதிகமாக எதிரொலித்தது.

Lord Jagannath temple in Puri

இந்நிலையில் நேற்று பேசிய ஒடிசா அமைச்சர் ஹரிசந்தன், “பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி ஞாயிறன்று தொடங்கும். இதற்கான அனுமதியை நீதித்துறை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.

70 நாட்கள் வரை மதிப்பிடும் பணி நீளாது!

இதற்கான வழிகாட்டு நடைமுறைகளை கோயில் நிர்வாக கமிட்டிக்கு அரசு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நகைகள் மதிப்பிடும் பணி வெளிப்படையாக நடக்கும் என்றும் இதற்காக ரிசர்வ் வங்கி பிரதிநிதி ஒருவரும் உடன் இருப்பார் என்றும் ஹரிசந்தன் கூறியுள்ளார்.

வழக்கமாக பொக்கிஷ அறை நகைகளை மதிப்பிட 70 நாட்கள் பிடிக்கும் என்றும் இம்முறை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளதால் விரைந்து பணிகளை முடிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.