பிரவதி பரிதா எக்ஸ் தளம்
இந்தியா

சுயேட்சை வேட்பாளர் டு முதல் பெண் துணைமுதல்வர்| ஒடிசாவில் சாதித்த வழக்கறிஞர்.. யார் இந்த பிரவதி பரிதா

Prakash J

18வது மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக அரியணையில் இருந்த பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதால், நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக (78 இடங்கள்) முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

அம்மாநில முதல்வராக மோகன் சரண் மாஜி, இன்று (ஜூன் 12) பதவியேற்றார். துணை முதல்வராக பிரவதி பரிதா பதவியேற்றார். இதன்மூலம் ஒடிசா அரசியலில் முதன்முறையாக துணை முதல்வரான பெண்மணி என்ற சாதனையை பிரவதி பரிதா படைத்துள்ளார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| மாமனாரின் 300 கோடி சொத்தை அபகரிக்க 1 கோடி செலவு செய்த மருமகள்.. விசாரணையில் புது தகவல்!

யார் இந்த பிரிவதி பரிதா?

ஒடிசாவின் நிமாபராவைச் சேர்ந்த பிரிவதி பரிதா, ஒரு வழக்கறிஞர். புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பை முடித்து ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், ஒடிசா மாநில பாஜகவின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்தார். பிரவதி பரிதா அரசு ஊழியரான (ஓய்வு) ஷியாம் சுந்தர் நாயக்கை மணம்புரிந்தார்.

நிமாபாரா தொகுதியில் இருந்து தற்போது முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரவதி பரிதா, கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பிஜு ஜனதா தள வேட்பாளர் சமீர் ரஞ்சன் தாஷிடம் தோல்வியைத் தழுவினார். இந்த தொகுதியில் அவர் இதுவரை நான்கு முறை போட்டியிட்டுள்ளார். இந்த முறை இவர் 95,430 வாக்குகளைப் பெற்று பிஜு ஜனதா தளம் வேட்பாளரை 4,588 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2009-ல் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட இவர், வெறும் 6,820 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதன்பின்னர், பாஜக வேட்பாளராக அடுத்தடுத்து களம் கண்டார்.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்| மாமியாரை 95 முறை கத்தியால் குத்திய மருமகள்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்