நவீன் பட்நாயக் file image
இந்தியா

நாட்டின் நீண்டகால முதல்வர்: ஜோதிபாசுவை பின்னுக்கு தள்ளி 2வது இடம்பிடித்த ஒடிசா முதல்வர்!

நாட்டிலேயே நீண்டகாலமாக முதல்வா் பதவியை வகித்தவா்களின் பட்டியலில் ஒடிசா முதல்வா் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா்.

Prakash J

சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் பவன் குமாா் சாம்லிங் 24 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராகப் பதவி வகித்து நீண்டகால முதல்வா் பட்டியலில் முதலிடத்தில் உள்ளாா். இவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில், அதிக காலம் முதல்வராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையை மேற்கு வங்காளத்தின் ஜோதிபாசு பெற்றிருந்தார். அவர் மொத்தம் 23 ஆண்டுகள் 137 நாட்கள் அந்தப் பதவியில் இருந்தார். இந்த நிலையில், ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்து 2வது இடத்துக்கு முந்தியுள்ளார், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.

கடந்த 2000ஆம் ஆண்டு மாா்ச் 5ஆம் தேதி முதல்முறையாக ஒடிசா முதல்வா் பதவியை ஏற்ற நவீன் பட்நாயக், தொடா்ச்சியாக ஐந்து தோ்தல்களில் வெற்றி பெற்று 23 ஆண்டுகள் 138 நாட்களை நேற்று (ஜூலை 22) எட்டினார். சாம்லிங், ஜோதிபாசுவுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் தொடர்ந்து 5வது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்த மூன்றாவது தலைவர் என்ற பெருமைக்கு உரியவராகவும் நவீன் பட்நாயக் இருக்கிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலுடன் சோ்த்து நடைபெற உள்ள ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் நவீன் பட்நாயக் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டின் நீண்டகால முதல்வராக வரலாற்றில் இடம்பிடிப்பாா்.

நவீன் பட்நாயக்

இதுகுறித்து முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவா் பிரசன்னா ஆச்சாா்யா, ‘நீண்டகால முதல்வா் பட்டியலில் நவீன் பட்நாயக் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் அனைத்து வரலாற்றையும் கடந்து நீண்டகால முதல்வா் என்ற பெருமையை நவீன் பட்நாயக் நிச்சயம் பெறுவாா்’ என்றாா்.