வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக் எக்ஸ்
இந்தியா

“வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசா?” - எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுத்த நவீன் பட்நாயக்!

Prakash J

ஜனநாயகத் தேர்தல் பெருவிழாவின் கடைசிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில் 57 மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளும் அடக்கம்.

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்காக தீவிர பரப்புரையாற்றிய பாஜகவின் மூத்த தலைவர்கள், நவீன் பட்நாயக்கை விமர்சிப்பதை காட்டிலும் அவருக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்தனர்.

அதாவது, ஒடிசா முதல்வரின் வலதுகரமாகவும், அம்மாநில அரசில் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கிவரும் வி.கே.பாண்டியனை, அடுத்த முதல்வராக நவீன் பட்நாயக் முன்னிறுத்துவார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் வி.கே.பாண்டியனை குறிவைத்து பாஜக தலைவர்கள் தாக்கிப் பேசி வருகின்றனர்.

குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும்” எனப் பேசியிருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரத்தில், இதற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்திருந்தார்.

இதையும் படிக்க: India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

இந்த நிலையில் மீண்டும் இதுகுறித்த கேள்விக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நவீன் பட்நாயக் அளித்த நேர்காணலில், “உங்களுடன் நெருங்கிய நபராக இருக்கும் வி.கே.பாண்டியன், ஒரு கேட் கீப்பர்போல செயல்படுவதாகவும், நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பதாகவும் கூறப்படுகிறதே” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இது மிகவும் மோசமான விஷயம், இதற்கு முன்பே நான் பல முறை பதிலளித்துள்ளேன், இது பல காலமாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, இதற்கு இப்போது எந்த அர்த்தமும் கிடையாது

தொடர்ந்து அவரிடம் “வி.கே.பாண்டியன்தான் உங்கள் அரசியல் வாரிசா” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அரசியல் வாரிசு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓர் அரசியல் கட்சியைப் பொறுத்தவரை, மக்கள்தான் அதனை முடிவுசெய்வார்கள். நான் இதுகுறித்து பல முறை சொல்லிவிட்டேன், பிஜு ஜனதா தளத்தின் அடுத்த தலைவரை மாநில மக்களே தேர்வு செய்வார்கள்.

ஒடிசாவிலும், தேசிய அளவிலும், பாஜக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அதுனால்தான், எதிர்க்கட்சிகள் குறித்து இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருகிறது. நாடு முழுவதும் அவர்கள் செல்வாக்கை இழந்து வருவதால் பாஜகவினர் விரக்தியில் இருக்கிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க:“அக். 7 உங்கள் கண்கள் எங்கே இருந்தன?” - வைரலாகும் All Eyes On Rafah ஹேஷ்டேக்-க்கு இஸ்ரேல் பதில்!