இந்தியா

5 வது முறையாக ஆட்சி! நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்!

5 வது முறையாக ஆட்சி! நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்!

webteam

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தொடர்ந்து முன்னிலை. இதன்மூலம் தொடர்ந்து 5 வது முறையாக ஆட்சியமைக்கிறார். 

1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒடிஷா கட்டக் நகரில் பிறந்தவர் நவீன் பட்நாயக். இவர் இளமை காலத்தில் அரசியலில் ஈடுபடாமல் எழுத்தாளராக இருந்து வந்தார். ஆனால் முதலமைச்சராக இருந்த அவரது தந்தை பிஜு பட்நாயக் மறைவிற்கு பிறகு தன்னை அரசியலில் ஈடுபடுத்தி கொண்டார். 

1996ஆம் ஆண்டு அஸ்கா தொகுதியிலிருந்து ஜனதா தளம் சார்பில் பதினொன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டிற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து பிரிந்து பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். 

பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சரவையில் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் ஒடிசா மாநில தேர்தல்களில் வெற்றி கண்டதால் 2000ஆம் ஆண்டு தமது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய கூட்டணி ஆட்சியின் முதல்வராக பொறுப்பேற்றார். 

2004 ஆம் ஆண்டு நடந்த மாநிலத் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியில் பெரும்பான்மை பெற்று முதல்வராக தொடர்ந்தார். இருப்பினும் 2007-08 ஆண்டுகளில் இரு கட்சிகளுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டது. இதனால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் பாஜகவிடமிருந்து பிரிந்து மூன்றாம் அணியாக உருவான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். 

இத்தேர்தலில் 21 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதியிலும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 103 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 2009 ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 

இதுவரை நான்கு முறை சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று நவீன்பட்நாயக் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது 5 வது முறையாக ஒடிசாவில் ஆட்சியமைக்கிறார். ஒடிஷா பேரவை தேர்தலில் முதல்வர் நவீன்பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 78 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் 26 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 

முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதி பாசு  1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு பிறகு அதிக நாட்கள் முதலமைச்சராக நவீன் பட்நாயக் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.