ஒடிசாவில் இளம்பெண் ஒருவர் கடந்த 4 வருடங்களாக தலையில் 18 ஊசிகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அதை தற்பொழுது அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்து மருத்துவமனை கூட்டிச்சென்று தலையில் இருந்த ஊசியை அகற்றியுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பலங்கிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் ஜமுத்ஜூலா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ராணா என்பவர் தாந்திரிக சிகிச்சை செய்வதை தெரிந்துக்கொண்ட அச் சிறுமியின் பெற்றோர், சிறுமியை சிகிச்சைக்காக அவரிடம் கூட்டிச் சென்றுள்ளனர்.
சந்தோஷ் ராணாவும் தந்திரிக சிகிச்சை என்ற பெயரில், உடல்நலம் சரியில்லாமல் மயங்கிய நிலையில் இருந்த பெண்ணின் தலையில் 18 ஊசிகளை செருகி இருக்கிறார். அந்த ஊசியானது அப்பெண்ணின் கபாளம் வரை சென்று இருக்கிறது. பிறகு அப்பெண் உடல்நலம் சரியானதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது உறவினர்கள் அப்பெண்ணை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவருக்கு CT ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அப்பெண்ணின் குடும்பத்தினரும் CT ஸ்கேன் செய்து பார்த்தபொழுது அப்பெண்ணின் மண்டை ஓட்டில் 18 ஊசிகள் இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து மருத்துவர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் நான்கு வருடம் முன்பு நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பெண்ணின் தலையில் இருந்த ஊசிகளை அகற்றியதுடன், சம்பந்தப்பட்ட சந்தோஷ் ராணாவின் மேல் வழக்கு பதிந்துள்ளனர். போலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.