இந்தியா

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் என்பது யார்?

webteam


பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வரும் கிரிமிலேயர் மற்றும் கிரிமிலேயர் அல்லாதவர் என்றால் யார்? அவர்கள் எப்படி முறைப்படுத்தப்படுகின்றனர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தனித்தனியே உள்ள நிபந்தனைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.   

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15 (பி) மற்றும் 15(சி) ஆகிய பிரிவுகள் சமுகத்தில் பின்தங்கிய சாதியினர் மற்றும் பட்டியலினத்தவர் (SC&ST)ஆகியவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் உரிமையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி சமூகத்தில் பின்தங்கிய சாதியினருக்கு 27 சதவிகிதமும், பட்டியலினத்தவருக்கு 22.5 சதவிகிதமும் இடஒதுக்கீட்டை அளித்துள்ளது.

இதில் 27 சதவிகித இடஒதுகீடு கொண்ட சமுகத்தில் பின்தங்கிய சாதியினர் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் சமுகத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டவர்கள்(Creamy layer).அவர்கள் இந்த 27 சதவிகித இடஒதுகீட்டை பயன்படுத்த முடியாது. இந்தப் பிரிவினரை வரையறுப்பதில் சில நிபந்தணைகள் உள்ளன. அவை கீழ்வருமாறு: 
  
   * ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், யுபிஎஸ்சியின் மற்றும் தேர்தல்         ஆணையத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தலைமைக் கணக்கு தணிக்கையாளர். 
   
   * குரூப்-A மற்றும் குரூப்--B பணிபுரியும் மத்திய, மாநில அதிகாரிகள் மற்றும் அதே பிரிவுகளில் உள்ள வங்கி ஊழியர்கள், பல்கலைக்கழக                   பணியாளர்கள் மற்றும் தனியார் துறையில் இதே பிரிவுகளில் பணிப்புரிபவர்கள்.
   
   * கர்னல் மற்றும் அதற்கும் மேல்நிலை பதவியிலுள்ள ராணுவம், கடற்படை, விமானபடை மற்றும் பாரா மிலிட்டரி வீரர்கள்.
 
   * மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் போன்ற தொழில்முறை துறையில் உள்ளவர்கள்.
 
   * வர்த்தகம் செய்பவர்கள், சுயத்தொழில் செய்பவர்கள் மற்றும் தொழிற்சாலைகள் முதலாளிகள்.
  
   * வருடாந்திர ஊதியம் 8 லட்சம் மற்றும் அதற்குமேல் பெறுபவர்கள்.
   
ஆகியவர்கள் சமுகத்தில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டவர்கள்(Creamy layer) என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குள் வராதவர்கள் சமுகத்தில் பொருளாதார மற்றும் சாதி ரீதியில் பின்தங்கிய பிரிவில் வருபவர்கள் (Non-Creamy layer)எடுத்து கொள்ளப்படுவர். இவர்களே, 27 சதவிகித இடஒதுகீட்டை பயன்படுத்த முடியும். 

ஆனால் தமிழக அளவில் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுகீடுகள் என்பது சாதி நிலையை மட்டுமே பிரதாமனாக எடுத்து கொள்ளப்படுகிறது. இதில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள், பின்தங்கியவர்கள் என்ற அளவீடு ஏற்கப்படுவதில்லை. தமிழகத்தில் ஒருவர் சமுதாய ரீதியில் பின்தங்கிய சாதியில் இருந்தாலும் மத்திய அரசின் விதிகளின்படி அவரை பிற்படுத்தப்பட்டவராக எடுத்து கொள்வதில்லை. 

ஏனெனில், மத்திய அரசின் சட்டத்தின்படி, சாதிய நிலையில் ஒருவர் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் அவர் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவராக இருக்க வேண்டும். அதாவது ஒருவரின் ஆண்டு குடும்ப வருமானம் எட்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி இருத்தால்  மட்டுமே அவர் மத்திய அரசின் சலுகைகளை பெறத் தகுதியானவராக ஏற்கப்படுகிறார். மேலும் மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கணக்கில் ஏற்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.