கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பேராயர் ஃப்ராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து 3 நாட்களாக கேரள சிபிசிஐடி போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் முன்னாள் பேராயர் ஃப்ராங்கோவை விசாரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சர்ச்சைக்குள்ளான ஃப்ராங்கோவை பேராயர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் கத்தோலிக்க சபை தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் ஃப்ராங்கோவை கைது செய்யக் கோரி கேரளாவில் போராட்டங்களும் நடந்துவந்தன. பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட தனக்கு நீதி தரக் கோரி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியும் வாடிகன் கத்தோலிக்க சபைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கேரளாவை சேர்ந்த ஃப்ராங்கோ முலக்கல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பேராயராக பணிபுரிந்தவர். கன்னியாஸ்திரி ஒருவரை அவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் ஃப்ராங்கோ முலக்கல் மீதான விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும் இவ்விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கேரள அமைச்சர் ஜெயராஜன் உறுதி தெரிவித்தார்.