இந்தியா

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஒரே நாளில் 61,483 பேர் தரிசனம்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஒரே நாளில் 61,483 பேர் தரிசனம்

webteam

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 61,483 பேர் தரிசனம் செய்தநிலையில், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை நாட்களான இன்றும் நாளையும் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அலை மோதி வருகிறது. வெள்ளிக்கிழமையான நேற்று (25.11.22) மட்டும் தரிசனத்திற்காக வெர்ச்சுவல் க்யூ மூலம் 65 ஆயிரத்து 746 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.

அவர்களில் நேற்று 61 ஆயிரத்து 483 பேர் தரிசனம் செய்துள்ளனர். சனிக்கிழமையான இன்று 86 ஆயிரத்து 814 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இன்று காலை 9 மணி வரை மட்டும் 33 ஆயிரத்து 294 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையே 61 ஆயிரம் கடந்த நிலையில், விடுமுறை நாளான இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரையில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சம் கடந்துள்ளது. "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் ஐந்து லட்சம் கடந்த நிலையில், இதில் ஸ்பாட் புக்கிக் செய்து வந்தவர்கள் மற்றும் வனப்பாதைகளில் வந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் கொண்டால் அதுவும் இரண்டு லட்சம் கடக்கும் என தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள், கேரளா அரசு துறைகள் மற்றும் தேவசம்போர்டு சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.