உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடன் ஏய்ப்பாளர்களின் பட்டியலை வெளியிடாதது குறித்து விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை வெளியிடாததற்காக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அதிகப்பட்ச அபராதத்தை ஏன் விதிக்க கூடாது என்றும் அந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகையை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாமல் வங்கிகளை ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கியை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டும் அதை வெளியிடவில்லை என மத்திய தகவல் ஆணையர் தன் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 16ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.