இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் ?

Rasus

நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு. இதன்மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்ற கருத்தை அரசு தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்தே இதனை வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு இன்னும் முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை.

சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் சட்ட ஆணையத்திற்கு இதுதொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் பட்சத்தில் ஆண்டுதோறும் தேர்தல் வருவது தவிர்க்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக செயல்படத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் இந்தாண்டு சட்டமன்ற பதவிக் காலம் முடியவுள்ள சில மாநிலங்களையும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற உடன் சில மாத காலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டிவரும் சில மாநிலங்களையும் சேர்த்து மொத்தமாக 11 மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.