காதல் கலப்புத் திருமணம் செய்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும், அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்றளவும் கலப்பு திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் செய்துக் கொள்வோர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவது, கட்ட பஞ்சாயத்து மூலம் பிரிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இரு வேறு சாதியினர், காதல் திருமணம் செய்துக் கொள்வதை யாரும் தடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். ஒரு பெண்ணும், ஆணும் திருமணம் செய்துக் கொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றும், அதை கேள்வி கேட்கவும், தடுக்கவும் பெற்றோர்கள், சமூகம் என யாருக்கும் உரிமை கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இதுப்போன்ற திருமணங்களை தடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இது போன்ற பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறினால் உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.