இந்தியா

வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது - ஏஆர் ரகுமான்

வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது - ஏஆர் ரகுமான்

webteam

கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது என ஏஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் உலகை ஆட்டிப்படைக்கும் இந்நேரத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து
ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் “இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து
ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க
அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப்
பணயம் வைக்கிறார்கள். உலகத்தை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து
ஒன்றுபடுவதற்கான நேரம் இது.

கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். எனவே மத வழிபாட்டு தலங்களுக்கு கூடிவந்து குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல.
அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை
கொடுக்கலாம்.

நீங்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள். சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு
முன் எந்த எச்சரிக்கையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கருத வேண்டாம். சிந்தனையுடன்
இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது'' என தெரிவித்துள்ளார்