இந்தியா

கேரள யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்: அன்னாசி இல்லை தேங்காயில் வெடிமருந்து

கேரள யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்: அன்னாசி இல்லை தேங்காயில் வெடிமருந்து

jagadeesh

கேரளாவில் கர்ப்பிணி யானை வெடிமருந்தால் கொல்லப்பட்ட சம்பவத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த யானை முதலில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடிமருந்தால் கொல்லப்பட்டது எனத் தகவல் வெளியானது. இப்போது முதல் கட்ட விசாரணையில் தேங்காயில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களை யானை சாப்பிட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்த யானையின் முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், "யானை அதிகப்படியான நீரை உறிஞ்சியுள்ளது, இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துவிட்டது. அதுவே யானை உடனடியாக உயிரிழந்ததற்கான காரணம். யானையின் வாய்ப் பகுதி வெடிபொருள்களால் வெடித்துள்ளது. அதனால் அதனுடைய வாய் பகுதி முழுமையாகக் காயப்பட்டு சீழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வலி, மன உளைச்சல் காரணமாக அந்த யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. இதனால் அந்த யானை முற்றிலுமாக சீர்குலைந்து நீரில் நின்று சரிந்து பின்பு மூழ்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த ரப்பர் தோட்ட விவசாயி வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ் வெளியிட்ட தகவல்படி இந்த வழக்கின் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக, வெடி பொருட்கள் செய்த இடத்திற்கே வில்சனை அழைத்துச் சென்றுள்ளது கேரள காவல்துறை மற்றும் வனத் துறை தரப்பு. ஒரு விவசாயத் தோட்டத்தில் பட்டாசை இருவரோடு சேர்ந்து வில்சன் உருவாக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இப்போது அந்த இருவரையும் தேடும் பணியைக் கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்துக் காட்டு விலங்குகளுக்கான மருத்துவர் கூறுகையில் " விளை நிலங்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, பழங்கள் மற்றும் மிருகக் கொழுப்புகளில் நாட்டுப் பட்டாசு வைப்பது கேரளாவில் வழக்கம். இதன் மூலம் காட்டு விலங்குகள் விளை பொருட்களைச் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் வெல்லம் கலந்த பட்டாசு வைக்கப்பட்ட தேங்காயைக் கர்ப்பிணி யானை சாப்பிட்டிருக்கும், அதனால்தான் அதன் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும். இது அந்த யானையைக் குறி வைத்தும் நடந்திருக்கலாம்" என்றார் அவர்.