அதானி குழுமம் - ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் எம்.எல். சர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வு முன்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், மாண்பையும் விமர்சிக்க கூடிய வகையில் உள்ள ஹிண்டன்பெர்க் அறிக்கையை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஊடகங்களுக்கு இந்த விவகாரத்தில் எந்த தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக குறிப்பிட்டதுடன், இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அதானி குழுமம் - ஹின்டன்பெர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அறிக்கை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைக்கவும் குழுக்களில் இடம்பெருவரின் பெயரை பரிந்துரைக்கவும் உத்தரவிட்டிருந்தது. சமீபத்தில் சீலிடப்பட்ட கவரில் குழு உறுப்பினர்கள் பெயரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில் அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நீதிமன்றமே குழு உறுப்பினர்களை முடிவு செய்யும் எனக் கூறி வழக்கில் உத்தரவை ஒத்தி வைத்திருந்தது.