சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் திரைப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்த படமும் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை.
பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்டாக தனது வாழ்க்கையை தொடங்கிய பால் தாக்கரே, 1966 ஆம் ஆண்டு சிவசேனா என்ற அமைப்பை தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக உருவாக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக் நடிப்பில் இயக்குநர் அபிஜித் பால் தாக்கரே வாழ்க்கையை படமாக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் மதம் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் குறித்தும் வசனங்கள் வருவதாலும், பால் தாக்கரேவாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக் மீதும் பல விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் “தென் மாநில மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பேசும் வகையில் இப்படத்தில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக” இத்திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சி தொண்டர்கள் பால் தாக்கரேவின் திரைப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்த படமும் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் தாக்கரேவின் திரைப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்த படமும் அனுமதிக்க முடியாது என அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை மீறி யாராவது திரைப்படத்தை வெளியிட்டால் சிவசேனா கட்சிக்கே உரிய பாணியில் அவர்களுக்கு பதில் அளிக்கப்படும் எனவும் சிவசேனா கட்சி தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் தாக்கரே வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.