இந்தியா

‘2019-20 ஆம் ஆண்டில் ஒரேயொரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை’ ரிசர்வ் வங்கி

‘2019-20 ஆம் ஆண்டில் ஒரேயொரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை’ ரிசர்வ் வங்கி

EllusamyKarthik

2019-20 நிதியாண்டில் புதிதாக ஒரேயொரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ)

கடந்த 2016 நவம்பரில் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பண புழக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. 

‘2000 நோட்டுகள்  அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக’ சமூகவலைத்தளங்களில்  வதந்திகள் பரவினாலும் அதற்கு விளக்கம் கொடுத்து வந்த ரிசர்வ் வங்கி இப்போது அதனை தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது.  

கரன்சி நோட்டுகளை அச்சிடும் ரிசர்வ் வங்கியின் அச்சகங்களில் 2019-20 நிதியாண்டில் ஒரேயொரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சிடவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016-17 நிதியாண்டில் மொத்த கரன்சி புழக்கத்தில் 50.2 சதவிகிதமாக இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 2019-20 நிதியாண்டில் வெறும் 22.6 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பொதுமக்கள் அதிகம் மேற்கொள்ளும் பரிவர்த்தனையை அடிப்படையாக வைத்தே கரன்சி நோட்டுகளை அச்சிடும் முடிவினை அரசு ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து செய்து வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தெரிவித்திருந்தும் குறிப்பிடத்தக்கது. 

ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்துள்ள 2000 ரூபாய் நோட்டுகள் 

நிதியாண்டு 

அச்சடித்த நோட்டுகள் 

2016-17

3.5 பில்லியன் 

2017-18

151 மில்லியன் 

2018-19

47 மில்லியன் 

2019-20

0

அதே போல 2019-20 நிதி ஆண்டில் மொத்தமாக சுமார் 176.8 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2019-20 நிதி ஆண்டில் அச்சிடப்பட்ட 22 பில்லியன் கரன்சிகளில் பாதிக்கும் மேற்பட்டவை 500 ரூபாய் நோட்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து. 

ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் போதும் 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.