மழையால் பாதிக்கப்பட்ட பகுதி pt web
இந்தியா

தென்மேற்கு பருவமழையின் தீவிரம்.. 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

பருவமழையின் தீவிரத்தையடுத்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா மற்றும் கோவாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை அதிகாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக வாகனங்கள் பழுதடைந்து சாலைகளில் நிற்கும் சூழலும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

குஜராத் மாநிலம் கடுமையான வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மழை தொடர்பாக இறந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்புகள், விளைநிலங்கள், சாலைகள் என பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தெற்கு குஜராத்தில் நவ்சரி மாவட்டத்தின் வழியே பாயும் புர்ணா நதி, அபாய அளவை கடந்து பெருக்கெடுப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ராவில், குண்டலிகா, அம்பா உட்பட நான்கு ஆறுகள் அபாய கட்டத்தை எட்டின. இதனால் கரையோர கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டது. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை ஒட்டியுள்ள மிதி ஆறு அதன் கொள்ளளவை எட்டியது. மழையால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புனேவில் வெள்ளத்தில் மூழ்கிய ஏக்தா நாக்ரி மற்றும் விட்டல் நகர் மற்றும் கல்யாணிநகர் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் பணியில் இந்திய ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.