நொய்டாவில் உள்ள பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 'சூப்பர் டெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் 'அபெக்ஸ்' என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரமான 'சியான்' 31 மாடிகளை உடையது; இதன் உயரம் 318 அடி.
இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த இரட்டை கோபுரங்களானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்படவுள்ளது. கட்டடங்களைத் தகா்ப்பதற்கான பணிகளை எடிஃபிஸ் என்ஜினியரிங் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, இந்த கோபுரங்களை இடிக்க, 3,700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. 20 ஆயிரம் இணைப்புகள் இந்த கட்டடத் தூண்களுக்கு இடையே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை வெடிக்கச் செய்வதன் மூலம் இரட்டைக் கோபுரங்களும் 9 வினாடிகளில் தரைமட்டமாகும். ‘வாட்டர்ஃபால் இம்லோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தகர்க்கப்படுகிறது. வெடிபொருட்கள் வெடித்ததும் நீழ்வீழ்ச்சி விழுவதுபோல் சில நிமிடங்களில் இந்த இரட்டை கோபுரம் சரிந்து தரைமட்டமாகும். அதாவது, கட்டடம் இடிந்து விழுந்ததும், உள்புறமாகவே விழும் என்றும் வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர் கட்டடப் பொறியாளர்கள். வெடிக்கும்போது உண்டாகும் அதிர்வுகள் 30 மீட்டர்கள் வரை உணர முடியும். ஆனால் நொய்டா நகரம் ரிக்டர் அளவு 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் என்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அனைத்து இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் 100 மீட்டர் தொலைவிலிருந்து ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் கட்டடத்தை தரைமட்டமாக்கும் பணி நடக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கட்டடங்கள் துணியால் மூடப்பட்டு தூசுகள் படியாத வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தகர்ப்பு பணிகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இடிப்பால் குவியும் கட்டடகழிவுகளை அகற்ற மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். ஒட்டுமொத்த இடிப்பு பணிகளுக்கும், 20 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நொய்டா நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. எமரால்ட் கோர்ட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அவர்களின் செல்ல பிராணிகளுடன் இன்று காலை 7 மணிக்குள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து 2,500 வாகனங்களும் அப்பபுறப்படுத்தப்பட்டன. 5.30 மணிக்கு மேல் குடியிருப்புவாசிகள் மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இரட்டை கோபுர கட்டிடத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களை தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இரட்டை கோபுர கட்டடங்களுக்கு அருகில் உள்ள சாலைகள் பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அச்சாலைகளில் பயணிப்போா் குறிப்பிட்ட நேரத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடிக்கப்படவுள்ள கட்டடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 6 அவசரகால ஊா்திகளும் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களை இடிப்பதால் ஏற்படவுள்ள தூசுப்படலத்தைக் கருத்தில்கொண்டு, கட்டடம் இடிக்கப்படும் சமயத்தில் வான்வெளிப்பகுதி மூடப்படும். அச்சமயத்தில் அப்பகுதியில் விமானங்கள் எதுவும் பறக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சோனாலி போகட் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - கோவா கிளப் உரிமையாளர் கைது