நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கரான அபிஜித் முகர்ஜி, அவரது மனைவி உள்ளிட மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் முகர்ஜி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், “இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை தற்போது நிலையற்றதாக உள்ளது. தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது பொருளாதாரம் விரைவில் மீட்சியடையும் என கூற முடியாது. கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி இருந்தது. தற்போது அதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ முதலில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதற்கு அபிஜித் பானர்ஜி எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். இந்தியர்கள் ஏற்க மறுத்த இடதுசாரி சிந்தனையை தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு பல முக்கிய விஷயங்களை செய்து வருகிறது. அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சியின் மீது ஒரு வழக்கும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.