இந்தியா

“மகளும் முக்கியம் தூய்மையும் முக்கியம்”... அதிரடி முடிவெடுத்த கிராம மக்கள்..!

“மகளும் முக்கியம் தூய்மையும் முக்கியம்”... அதிரடி முடிவெடுத்த கிராம மக்கள்..!

Rasus

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிராமம் ஒன்று, தங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் நலனுக்காக முக்கிய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சுத்தமே சோறு போடும் என்ற வார்த்தையை நாம் சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் அதன்படி வாழ்கிறோமா என்பதுதான் கேள்விக்குறி. பொதுவாக நாம் வெளியில் செல்ல வேண்டும் என்றால் பொருத்தமான உடையை அணிந்து கொள்வோம். வாசனை திரவியங்களையும் தெளித்துக் கொள்வோம். நம்மை பலரும் பார்க்க வேண்டும் என நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்வோம். ஆனால் நம் வீட்டு கழிப்பறையை சுத்தமாக வைத்திருக்கிறோமோ..? அதனை தினசரி சுத்தம் செய்கிறோமோ.. அதுமட்டுமல்ல இன்னும் பல கிராமங்களில் கழிவறை இல்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் மலங்களை கழிப்பதற்காக புறவெளியை நாடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் மாற்ற கிராமம் ஒன்று முக்கிய முடிவெடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வேண்டும் என மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல ஏழை மக்கள் கழிவறை கட்ட ஏதுவாக அவர்களுக்கு மத்திய அரசு மானியமும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கோடிகன் கிராம மக்கள் அதிரடியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அதாவது கழிவறை இல்லாத வீட்டில் தங்களது பெண்களை திருமணம் செய்துகொடுக்க மாட்டோம் என முடிவெடுத்துள்ளனர்.  அதேபோல தங்களது வீட்டில் கழிவறை இல்லாத ஆண்கள் தங்களது காதலை சொன்னாலும் அதனை ஏற்க வேண்டாம் என தங்களின் பெண்களுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுமட்டுமில்லாமல் இந்த கிராமத்தில் உள்ள அனைவரின் வீட்டிலும் கழிப்பறை உள்ளதை அவர்கள் பெருமையாக கூறுகின்றனர்.

ஏற்கனவே ஹரியானா மாநிலத்தில் உள்ள பல கிராமங்கள் தூய்மையை வலியுறுத்தும் பொருட்டு இதுபோன்ற அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றியிருந்த நிலையில் தற்போது கோடிகன் கிராமமும் இந்த முடிவை எடுத்துள்ளது. கழிவறை வசதி இல்லையென்றால் மணப்பெண் கிடையாது என்ற முடிவின்படி செயல்பட கிராம மக்கள் முன்வந்துவிட்டனர். கிராம சுத்தமும் முக்கியம். அதேசமயம் தங்கள் வீட்டு பிள்ளைகள் புகுந்த வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தெரிவித்துள்ளனர்.