இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: மத்திய அரசு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: மத்திய அரசு

webteam

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படுவது வழக்கம். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் தொடருடன் சேர்த்து குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதனிடையே இது தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளது. இதுபற்றி நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து, கூட்டத்தொடருக்கான தேதியை அமைச்சரவை அறிவிக்கும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும் நேரடியாக ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்து கட்சிகளும் விரும்புவதாகவும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டட்தொடரை கூட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோரிக்கைக்கு பதிலளித்த கடிதத்தில் ஜோஷி இதை உறுதிப்படுத்தினார்.