இந்தியா

"யூனிஃபார்ம் கோட் இல்லை; ஆனால்..." - ஹிஜாப் சர்ச்சை குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பேச்சு

"யூனிஃபார்ம் கோட் இல்லை; ஆனால்..." - ஹிஜாப் சர்ச்சை குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பேச்சு

Veeramani

சீருடை குறியீடு நிர்ணயம் செய்யவில்லை என்றும், ஹிஜாப் விஷயத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் விதியை பின்பற்றுமாறும் கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் வலியுறுத்தியுள்ளார்

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி நிர்வாகம், வகுப்புகளில் பாடம் நடத்தும் போது ஹிஜாப் ( புர்கா) அணிந்து வரக்கூடாது என்று தெரிவித்துள்ள என்ற முடிவை ஏற்காத காரணத்தால், 6 முஸ்லிம் மாணவர்களை மூன்று வாரங்களாக வகுப்புகளுக்குள் அனுமதிக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைக்குள் நுழையும் போது ஹிஜாப் அல்லது புர்காக்களை அணிய அனுமதிக்கப்படுகிறது, ஆனால் வகுப்பு தொடங்கும் முன் அதனை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டுவரும் பெண்களுக்கான சுடிதார் மற்றும் துப்பட்டா போன்ற ஆடைக் குறியீட்டைப் பின்பற்றுமாறும் முதல்வர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

இருப்பினும், ஆறு மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடு குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி போராட்டத்தைத் தொடங்கினர். ஏழாவதாக நேற்று அவர்களுடன் ஒரு மாணவி சேர்ந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், "கல்லூரியின் இந்த உத்தரவால் 94 மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, தயவு செய்து ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுங்கள், ஆடைக் கட்டுப்பாட்டை ஏற்காத மாணவிகள் PFI-ஐச் சேர்ந்த கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிடம் உதவி கோரியதை அடுத்து எதிர்க்கட்சிகள் பிரச்சினையை அரசியலாக்குகிறது. இந்தத் தூண்டுதலுக்கு ஒரே ஒரு காரணம் 2023 சட்டமன்றத் தேர்தல்தான். வாக்காளர்களைக் கவர எதிர்க்கட்சிகளிடம் எந்த நல்ல யோசனையும் இல்லை, எனவே துருவமுனைப்புக்கு முயற்சி செய்கிறார்கள். அரசு சீருடைக் குறியீட்டை நிர்ணயிக்கவில்லை, நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 1985 இல் சீரான ஆடைக் குறியீடு உருவாக்கப்பட்டது, கல்லூரி அதிகாரிகள் அதை கடைபிடிக்க விரும்புகிறார்கள், இது கடந்த 36 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதிகபட்ச முஸ்லிம் மாணவிகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, தற்போது ஆறு பேருக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது” என்று கூறினார்.

இது தொடர்பாக பிஎப்ஐ-யின் பொதுச் செயலாளர் நசீர் பாஷா, சில கல்லூரிகள் ஹிஜாப் விவகாரத்தில் சர்ச்சையை உருவாக்குவதாகவும், முஸ்லிம்களின் மத சுதந்திரத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மாத தொடக்கத்தில், உடுப்பியில் இந்த சர்ச்சை வெடித்ததை அடுத்து, கோப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காவி நிற தாவணியை அணிந்து இந்து மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர்.