இந்தியா

8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா ? - மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா ? - மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

rajakannan

புதிய கல்விக் கொள்கையில் இந்தி மொழியை கட்டாயமாக்க பரிந்துரை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்க அளித்துள்ளார்.

துவக்கப் பள்ளியில் இருந்து, கல்லூரி வரையிலான கல்வி முறையில் மாற்றங்கள் செய்யும் வகையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை, மத்திய அரசு வகுக்கிறது. இந்திரா காந்தி(1968), ராஜிவ் காந்தி (1986) ஆகியோரை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2017 ம் ஆண்டு புதிய தேதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முயற்சிகளை தொடங்கியது. 

இஸ்ரோ முன்னாள் தலைவர், கஸ்துாரி ரங்கன் தலைமையில் இதற்காக குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவையை இறுதி செய்து உள்ளதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார். டிசம்பருக்கு முன்பாக வரைவு அறிக்கையும் அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில், நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள்  வெளியானது. மும்மொழி கொள்கை திட்டத்தை பின்பற்றவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உறுதி செய்யும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய வரைவு கொள்கையில் 8ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என குழு பரிந்துரைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.