வாசனை, சுவை தெரியவில்லையென்றால் அது கொரோனா பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதித்ததற்கான புதிய அறிகுறி குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதித்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
மேலும் அறிகுறியே இல்லாமல் பலபேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், இந்தச் சூழலில் சுவை மற்றும் மணம் அறியும் திறன் இல்லாமல் போவது கொரோனா பாதிப்பின் அறிகுறி என்று சுகாதாரத் துறை தெளிவுப்படுத்தியிருக்கிறது. கொரோனா பாதித்தவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளியாகும் நுண்ணிய நீர்த்துளிகள், காற்று மற்றும் திடப்பொருட்களில் விழுந்து அப்படியே இருக்கும். இதனை நாம் கைகளால் தொட்டு மூக்கு, வாய் அல்லலது கண்களில் வைக்கும்போது கொரோனா பரவும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535 லிருந்து 3,08,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,47,195 லிருந்து 1,54,330ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498லிருந்து 8,884ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 47,796ஆக உயர்ந்துள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,717ஆக உயர்ந்துள்ளது. மும்பை பகுதியில் மட்டும் 55ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2,044 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 90 பேர் கொரோனாவுக்கு மும்பை பகுதியில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.