மாதிரிப்படம், தருண் சக்சேனா freepik, x page
இந்தியா

”45 நாட்கள் தூங்கல”.. நிறுவனம் கொடுத்த டார்ச்சர்.. பணி சுமையால் ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

Prakash J

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பேராயில் என்ற 26 வயது இளம்பெண், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராகப் பணிக்குச் சேர்ந்த கொஞ்ச நாட்களில் திடீரென உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்புக்குக் காரணம் அதிகமாக வழங்கப்பட்ட பணிச்சுமையே என அவரது தாயார் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக அவரது தாயார் எழுதியிருந்த கடிதம் இணையத்தில் எதிர்வினையாற்றியது. இதையடுத்து இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், மத்திய அரசு உத்தரவிட்டு அதன்பேரில் நிறுவனத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லக்னோவிலும் பணி அழுத்தம் காரணமாக, தனியார் வங்கி ஊழியரான சதாஃப் பாத்திமா என்ற பெண்மணி மதிய உணவு சாப்பிட, ​​நாற்காலியில் அமர்திருந்தபோது திடீரென மயக்கமடைந்து தரையில் சரிந்தார். இந்த இருசம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறியதால் நாடும் முழுவதும் பேசுபொருளானது.

அன்னா செபாஸ்டியன் பேராயில், சதாஃப் பாத்திமா

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் தனியார் நிறுவன ஊழியரான தருண் சக்சேனா என்பவர், அதிக பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மற்றொரு அறையில் அடைத்து வைத்திருந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் மனைவி மேகா, குழந்தைகள் யாதர்த், பிஹு உள்ளனர். தருண் சக்சேனா கடந்த இரண்டு மாதங்களாக கடினமான இலக்குகளை அடையுமாறு நிறுவனம் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், சம்பளம் பிடித்தம் செய்வதாக மிரட்டியதாகவும் அடிக்கடி கூறியுள்ளார். தருண் தனது மனைவிக்கு அனுப்பிய ஐந்து பக்க கடிதத்தில், தன்னால் முடிந்தவரை முயன்றும் இலக்குகளை அடைய முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இதனால், தனது வேலையை இழக்க நேரிடும் என்று கவலை அடைந்ததாகவும், மூத்த அதிகாரிகள் தன்னை பலமுறை அவமானப்படுத்தியதாகவும் அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க: முக்கிய செய்தி|அக். மாதத்தில் 15நாட்கள் வங்கிகள் விடுமுறை; எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நானும், எனது சக தொழிலாளர்களும் எங்கள் பகுதியில் திரும்ப வராத இஎம்ஐகளுக்கு பணம் செலுத்தினோம். பணத்தை திரும்பப்பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மூத்த அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்தோம். ஆனால் அவர்கள் எனது பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. நான் 45 நாட்களாக தூங்கவில்லை, சாப்பிடவும் இல்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். எந்த விலை கொடுத்தாலும் இலக்குகளை அடையும்படி அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி மூத்த மேலாளர்கள் என்னை வற்புறுத்துகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி நான் மிகவும் பதற்றமாக இருக்கிறேன், நான் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டேன், நான் செல்கிறேன்” எனத் தெரிவித்துள்ள அவர், தன் தற்கொலைக்குக் காரணமான மூத்த அதிகாரிகளின் பெயர்களையும் அதில் தெரிவித்திருந்தார்.

தருண் சக்சேனா

தருணின் பிரேதப் பரிசோதனை தயாராகி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கவுதம் தெரிவித்தார். "மூத்த அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடமிருந்து புகார் வந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்த நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

இதையும் படிக்க: ”இது எனக்கு பெரிய அவமானம்..” - IIFA விருது விழாவில் நடந்த மோசமான அனுபவம்.. கன்னட இயக்குநர் காட்டம்!